2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கோயில்களை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை ஒழிப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.
திருப்பதியில் நடைபெற்ற சர்வதேச கோயில்கள் மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியதை தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், பாரதத்தின் கோயில் பொருளாதாரம் குறித்த தமது கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். திருப்பதி, வாரணாசி, அயோத்தி, ஸ்ரீரங்கம், மதுரை, உஜ்ஜைன் உள்ளிட்ட நகரங்களின் பொருளாதார வளர்ச்சி மையமாக கோயில்கள் இருப்பதை குறிப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தர்மத்திற்காக தொடர்ந்து போராடும் சிறந்த ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் போர்வீரர்களில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பிற்கு முரணான இந்து சமய அறநிலையத் துறை சட்டம் ஒழிக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.