ஆந்திராவில் கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு, சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்ததில் இருவர் காயமடைந்தனர்.
விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்த மணல் லாரியில் பிரேக் பிடிக்காததால், அதனை தடுப்பு சுவரில் மோதி நிறுத்த ஓட்டுநர் முயன்றார்.
அப்போது தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு அங்கிருந்த சிறுவர் பூங்காவிற்குள் லாரி புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் லாரி ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாள்தோறும் பலர் அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், இன்று அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.