திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மதுரை உதவி காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன. இவற்றை தவிர்க்கும் விதமாக அரசியல் கட்சித் தலைவர்கள் மலையேற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பகுதிகளில், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
இதுகுறித்து அறிந்த பாஜகவினர், துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கக்கூறி காவல்துறை உதவி ஆணையர் சசி பிரியாவிடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், தமிழ்நாடு உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்தார். மேலும், காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்பட்டுவருவதாகவும் குற்றம் சாட்டினார்.