சென்னை முகப்பேர் அருகே வங்கியில் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்யும்போது, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு முகப்பேர் எபினேசர் அவென்யூவில் வசிப்பவர் இன்பராஜ். இவர் தனது மனைவி கனிமொழி மற்றும் தாய் எஸ்தர் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவர் இடைத்தரகர் மூலம் இந்தியன் வங்கியில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது. இந்த கடனில் சில மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாக இன்பராஜ் தரப்பில் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக வழக்கு எழும்பூர் டிஆர்பி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போலீஸ் உதவியுடன் வங்கி தரப்பில் இருந்து ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த இன்பராஜின் மனைவி கனிமொழி மற்றும் தாய் எஸ்தர் ஆகியோரை வங்கி அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். இதனால் மூதாட்டி எஸ்தர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வங்கியில் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்யும்போது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது