நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார்.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாரன் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடரந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தேர்தல் ஆணையர் சக்பீர் சிங் சந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முதல் படி வாக்களிப்பது என்றும், எனவே 18 வயதை நிறைவு செய்த ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்திய அரசியலமைப்பு, தேர்தல் சட்டங்கள், விதிகள் மற்றும் அதில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் இருப்பதாகவும், எப்போதும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் 61 வயதான ஞானேஷ்குமார், கான்பூரில் உள்ள இந்திய பொறியியல் நிறுவனத்தில் சிவில் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார்.
இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் நிறுவனத்தில் வணிக நிதி படிப்படையும், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் பயின்றுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை வரைவு செய்ததிலும், அயோத்தி கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்குகளில் ஆவணங்களை கையாண்டதிலும் முக்கிய பங்கு வகித்தவர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றிருக்கும் இவர், 1988ஆம் ஆண்டு கேரளா ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்தவராவார். சமீபத்தில் உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளர் பதவியையும் வகித்துள்ளார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஞானேஷ்குமார், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.