மகா கும்பமேளா கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புவதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி 30-ம் தேதி கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உத்தரப்பிரதேச அரசின் அஜாக்கிரதையே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புவதாக கூறினார்.
கும்பமேளா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைப்பதும், போலி காணொலிகளை பகிர்வதும் 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதற்கு சமம் எனவும் குறிப்பிட்டார்.
மகா கும்பமேளா அரசு நிகழ்ச்சி அல்ல ஒரு சமூகத்தின் நிகழ்ச்சி எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பினாலும் கும்பமேளா மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் கூறினார். மேலும், பிரயாக்ராஜ் ஆற்றுநீர் குளிப்பதற்கு உகந்தது எனவும் விளக்கம் அளித்தார்.