வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது முறையாக வருகைப்பதிவு வைத்திருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தனியார் பல்கலைக் கழகத்தில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஸ்ரீரிஷுக்கு வருகைப்பதிவு குறைவாக இருந்ததால் செமஸ்டர் தேர்வு எழுதவும், கல்வியாண்டுக்கான வகுப்பை தொடரவும் அனுமதி மறுக்கப்பட்டது.
கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்த்து மாணவர் ஸ்ரீரிஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மாணவர் ஸ்ரீரிஷ் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மாணவர் ஸ்ரீரிஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மேற்கோள்காட்டி மாணவரை தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிடுமாறு வாதிட்டார்.
அப்போது மாணவர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என நீதிமன்றம் பல வழக்குகளில் கூறியுள்ளது என்றும்,
வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவரை தேர்வு எழுத அனுமதிப்பது வருகைப்பதிவு முறையாக வைத்துள்ள மாணவர்களை கேலிக்குள்ளாக்கும் என்றும் தெரிவித்தனர்.
உரிய கட்டணத்தை செலுத்தி மாணவர் மீண்டும் படிப்பை தொடர விரும்பினால் அதற்கு அனுமதியளிக்க வேண்டும் என தனியார் பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.