தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல என தெரிவித்த பின்பும் பி எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்றால் என்ன ? அதனால் ஏற்படும் பயன்கள் என்ன ? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
சமக்ர சிக்ஷா அபியான் எனும் ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை உருவாக்க முதற்கட்டமாக 27 ஆயிரத்து 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளைப் போல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல்,
அரசுப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்திய பின் மீண்டும் மாநில அரசிடம் ஒப்படைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களான மும்மொழிக் கொள்கை, பன்னிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு உள்ளிட்டவைகோடு தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும்.
அடிப்படைக் கல்வியாக KG, LKG, UKG, ஒன்று, இரண்டாம் வகுப்புகளின் பாடங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்படும். 3 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு விளையாட்டு அடிப்படையில் கல்வி முறை அமைந்திருக்கும்.
6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கணினி திறன்களை வளர்க்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்படும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தொழிற்கல்வி மற்றும் விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து கற்கும் வசதி இடம்பெற்றிருக்கும்
கல்வி முறைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள், அறிவியல், கணினி ஆய்வக வசதி, நூலகம், ஸ்மார்ட் வகுப்பறைகளும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் சிறப்பு அம்சங்கள். நீர் பாதுகாப்பு, கழிவு மறு சுழற்சி, மின்சார கட்டமைப்பு, இயற்கை வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் பசுமைப் பள்ளிகளாகவும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் உருவாக்கப்படும்.
மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல என மத்திய அரசு தெரிவித்த பின்பும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் எனும் பெயர் இருப்பதால் மட்டுமே இத்திட்டத்தை மாநில அரசு ஏற்க மறுப்பது ஏன் ? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்
ஹைடெக் கட்டமைப்புடன் தரமான கல்வி வழங்கும் நோக்கில் கொண்டுவரப்படும் பள்ளியை தடுப்பதற்கு பின் தமிழக அரசின் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.