மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் சீராக முன்னேறி வருவதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டு மே மாதம் தொடங்கிய கட்டுமான பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி நிலவரப்படி முதற்கட்ட பணிகளில் 24 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ள எய்ம்ஸ் நிர்வாகம், முழு கட்டுமான பணிகளையும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நீடித்த நிலைத்தன்மையை மையமாக கொண்டு, உலகத் தரத்திற்கு ஏற்ப கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ள எய்ம்ஸ் நிர்வாகம், விளையாட்டு வசதி, குடியிருப்பு வளாகம், 750 இருக்கைகள் கொண்ட அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் எய்ம்ஸ் வளாகம் அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் அரசுக் கல்லூரியில் பயிலும் எய்ம்ஸ் மாணவர்கள் இந்தாண்டு இறுதிக்குள் தோப்பூரில் கட்டப்படும் நிரந்தர வளாகத்திற்கு மாற்றப்படுவார்கள் எனவும் மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.