பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிய பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து அந்த சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாணைக்கு வந்த நிலையில், சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் “சாதிகள் இல்லையடி பாப்பா” என பாடம் நடத்துவது பெரிய முரண் என நீதிபதி தெரிவித்தார்.
பகுத்தறிவுவாதிகள் மற்றும் நாத்திகர்கள் சங்கங்கள் கூட சாதிப் பெயர்களை தாங்கியிருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, சில அரசு பள்ளிகளில் கூட சாதிப் பெயர் இடம் பெற்றுள்ளதாக அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என கேள்வி எழுப்பிய நீதிபதி, தமிழக அரசு இதற்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.