தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகளை திறக்க வலியுறுத்தி நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும், சிப்காட் தொழில் வளாகத்தில் புதிய தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற இருந்தது.
சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி போராட்டத்திற்கு மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்ததுடன், போராட்டம் நடைபெறுவதாக இருந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நல சங்க ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல், நீதிமன்றத்திற்கு சென்று போராட்டத்திற்கான அனுமதி பெறப்படும் என்று கூறினார்.