தென்காசி அருகே, இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள், அடுத்த கட்டமாக ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக அறிவித்துள்ளனர்.
சில்லரைப்புரவு கிராமத்தில், பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் பல தலைமுறைகளாக சிலர் வீடு கட்டி குடியிருந்து வரும் நிலையில், ஒவ்வொரு குடும்பத்தாரும் தலா 6 லட்சம் ரூபாய் வரி கட்ட வேண்டும் என்றும், இல்லையென்றால் கோயில் நிலத்தை காலி செய்ய வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் அறிக்கை அனுப்பியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து கடந்த 17-ஆம் தேதி முதல் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால், அடுத்த கட்டமாக ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக அறிவித்துள்ளனர்.