உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் நடந்த கலவரத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சதி திட்டம் தீட்டப்பட்டதாக சிறப்பு விசாரணை குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில், 4 ஆயிரத்து 400 பக்க குற்றப்பத்திரிகையை, சிறப்பு விசாரணை குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த சம்பல் காவல்துறை, கலவரம் நடைபெற்ற இடத்தில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்றும் கூறியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷாரிக் சதா என்பவர்தான் இந்த கலவரத்தை தூண்டிவிட்டதாக கூறிய போலீசார், தாவூத் இப்ராஹிம் கும்பல் மற்றும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐஉளவு அமைப்புடன் ஷாரிக் சதாவிற்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பியோடிய ஷாரிக் சதா, அங்கிருந்து சம்பல் கலவரத்துக்கு சதி திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.