இந்துக்கள் ஒவ்வொருவருமே தன்னோட வாழ்நாள்ல ஒரு தடவயாவது போயிட்டு வந்துரனும்னு நினைக்கக் கூடிய புண்ணிய ஸ்தலங்கள்ல முக்கியமானது காசி. இந்த புண்ணிய பூமியில நம்மோட காலடித் தடங்கள பதிக்க வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுத்தது காசி தமிழ் சங்கமம்.
தமிழ்நாட்டுக்கும் வாரணாசிக்கும் இடையே இருக்கக் கூடிய பண்டய கால காலாச்சாரம், பண்பாடு மற்றும் உயிரோட்டமான பிணைப்புகளை மீட்டெடுக்கும் வகையில நம் பிரதமர் மோடியின் சிந்தனையில உதித்த உன்னதமான நிகழ்வு தான் இந்த காசி தமிழ் சங்கமம். கடந்த ரெண்டு வருசத்துல கிடைச்ச வரவேற்ப தொடர்ந்து காசி தமிழ் சங்கமம் 3.0 ங்குற கலாச்சார பகிர்வு நிகழ்வுல கலந்துக்கிறதுக்காக அந்த புனித நகரத்தை நோக்கி நம்ம பயணத்த தொடங்குனோம்.
காசி நகரோட மையத்துல இடைவிடாம ஓடிட்டிருக்கும் கங்கை நதியைச் சுத்தி சுமார் 50க்கும் அதிகமான காட்கள் இருக்கு. காட்களா அப்படி என்ன. அது வேற ஒன்னுமில்ல நம்ம புழக்கத்துல பயன்படுத்துற படித்துறையைத் தான் காட்னு சொல்றாங்க. அந்த காட்கள்ல நமோகாட்னு சொல்லப்படுற மிகப்பிரபலமான சுற்றுலாத்தளத்துல தான் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு இந்த வருசம் நடந்து கிட்டு இருக்கு.
காசிக்கும் தமிழகத்துக்குமான வரலாற்றுப் பிணைப்ப புதுப்பிக்கும் இந்த நிகழ்வுல பங்கேற்க தமிழகத்துல இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், வேளாண் விஞ்ஞானிகள், கைவினைஞர்கள், தொழில் முனைவோர்னு பலரும் சென்னையில இருந்து காசிய நோக்கி புறப்பட்டாங்க. புறப்படும் போதும் சரி, வாரணாசியில இறங்குறப்பவும் சரி, வரவேற்பும் உபசரிப்பும் ஒன்னுக்கு ஒன்னு மிஞ்சியதாவே இருந்துச்சு.
காசியில நாம எடுத்து வைக்குற ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு விதமான புது அனுபவத்த சொல்லித் தருது. எங்க திரும்புனாலும் கோயில்கள், குறுகலான சந்துகள்ல எப்போதோ கட்டப்பட்ட வீடுகள், அந்த வீடுகளுக்கு நடுவுலயும் சின்னச் சின்ன கோயில்கள்னு பண்டைய கால புராணங்கள்ல காசிய பத்தி சொல்லப்பட்டிருக்குற வரலாற்ற நம்மோட கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துது.
காசிக்குனு பிரதானமான உணவுப் பண்டங்கள் எத்தனையோ இருந்தாலும் எங்க திரும்புனாலும் பிரபலமா தென்படுறது தயிரும் குளோப் ஜாமுனும் தான். புனித நகரத்தை வேடிக்கை பாத்துக்கிட்டே நிகழ்வு நடைபெறுற நமோ காட் குள்ள நுழைஞ்சோம்.
முறையான திட்டமிடல், நேர்த்தியான ஒருங்கிணைப்பு, மக்கள் மத்தியில் வரவேற்பு
இந்த மூனுமே ஒண்ணா இணைஞ்சா எப்படி இருக்குங்குறத அங்க பாத்தோம். விடுதலைப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், முன்னோடிகளோட வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சி நம்மள அந்த காலத்துக்கே எடுத்துட்டு போச்சு.
மென்மையான கல் ஜல்லி வேலைப்பாடு, ஜவுளி ரகங்கள், சின்னச் சின்ன பொம்மைகள்னு அங்க வச்சுருந்த பொருட்கள் எல்லாமே, காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே இருக்கக் கூடிய ஏதோ ஒரு உறவ பிரதிபலிச்சுகிட்டே இருந்துச்சு.
ரெண்டு பழம்பெரும் நகரங்களோட பண்டைய கால உறவ மீட்டெடுக்குறதும், புதுப்பிக்குறதும் புத்தகங்கள் தான். அந்த வகையில அங்க நடந்த புத்தகக் கண்காட்சி பார்வையாளர்கள் மத்தியில பெரிய வரவேற்ப பெற்றுருந்துச்சு. இத ஏற்பாடு செஞ்சவங்க செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்.
தப்பாட்டத்துல தொடங்கி தெருக்கூத்து நாடகங்கள் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கலை நிகழ்ச்சிகள் நம்ம கண்களுக்கு விருந்தளிச்சது. கடந்த ரெண்டு வருசங்கள்ல கலந்து கிட்டவங்களுக்கு கிடைக்காத அரிய வாய்ப்பு, இந்த வருசங்கள்ல கலந்துகிட்டவங்களுக்கு கிடைச்சது. அது 144 வருசங்களுக்கு பிறகு நடைபெறுற கும்பமேளாவுல புனித நீராடுதலும், அயோத்தி ராமர் கோயில பார்வையிடுறதும் தான்.
யாதும் ஊரே யாவரும் கேளீர்ங்குற வார்த்தைக்கு வடிவம் கொடுக்குற மாதிரி பாரதத்துல புறந்த எல்லாருமே சமம் தாங்குற உறுதிபடுத்தும் வகையில நடந்த இந்த நிகழ்வு பார்போற்றும் நிகழ்வா அமைஞ்சிருந்தது.
இப்ப நம்ம வந்த வேலை முடிஞ்சது. இவ்வளவு தூரம் வந்துட்டு காசி விஸ்வநாதரை தரிசிக்காம திரும்ப முடியுமா?…. அவர தரிசிக்கிறதுக்கு முன்னாடி கங்கைய பத்தி ஒரு சின்ன இண்ட்ரோ… கங்கையில குளிச்சா பாவங்கள் தொலைஞ்சுரும்ங்குறது இந்துக்களோட நம்பிக்கை.
இந்த நதி பயணிக்கிற வழியில எத்தனையோ புனித ஸ்தலங்கள் இருந்தாலும் காசியில மட்டும் தான் கங்கை பல்வேறு அருள் சக்திகளோட பயணிக்கிறதா சொல்றாங்க. அதுனால தான் காசிக்கு வரவங்கள்ல பெரும்பாலானவங்க கங்கையில குளிச்சுட்டு காசி விஸ்வநாதரையும், அண்ண பூரணியையும் வழிபடுறதயும் வழக்கமா வச்சுருக்காங்க.
ஏற்கனவே காட்கள பத்தி பேசுனோமில்லையா… அந்த காட்கள் தான் நம்ம பயணத்தோட அடுத்த இலக்கு. கங்கையைச் சுத்தி சஸ்வமேத காட், மணிகர்னிகா காட், கேதார் காட், அரிச்சந்திரா காட்னு அம்பதுக்கும் அதிகமான காட்கள் இருக்கத பாக்க முடியுது. அதுல மணிகர்னிகா மற்றும் அரிச்சந்திரா இந்த ரெண்டு காட்டுகள் தான் ரெம்ப முக்கியமானது. ஏன்னா இங்க தான் உயிரிழந்தவங்களோட உடல்கள் எரியூட்டப்படுது.
படகுல பயணிச்சுட்டு இருக்கும் போதே இந்த ரெட்டு காட்லயும் எந்நேரமும் சடலங்கள் எரிஞ்சுகிட்டே இருக்குறத பாக்கலாம். அங்கங்க தமிழ் எழுத்துக்களோட கூடிய சிவன் கோயில்களும் நம்ம கண்களுக்கு தெரியுது. முன்பெல்லாம் கங்கை நதி குளிக்க முடியாத அளவுக்கு மாசுபட்டு இருக்கும்.
ஆனா இப்ப மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால கங்கையில தூய்மையான நீர் ஓடிட்டு இருக்குறதா அங்க குளிக்கிற மக்கள் பேசிக்கிறாங்க. மிகக்குறுகலான சாலைகளும், லட்சக்கணக்கான பக்தர்கள் நிற்கக் கூடிய வரிசையும் காசி விஸ்வநாதர தரிசிக்கிறது அவ்வளவு எளிதல்லங்கிறத நமக்கு உணர்த்துச்சு. பொறுமையா விஸ்வநாதர நோக்கி நம்ம நகர்ந்துட்டு இருக்குறப்ப சில சாதுக்களோட தரிசனத்தையும் நம்மளால பெற முடிஞ்சது.
கோயிலோட நான்கு நுழைவாயில்கள்ல எந்த பக்கம் நுழைஞ்சாலும் விஸ்வநாதர் வீற்றிருக்குற கருவறை தான் முதல்ல தென்படும். வழக்கமாக கோயில் கருவறை மாதிரி இல்லாம கீழ தரையோட தரையாக மிகச்சிறிய லிங்க வடிவுல வண்ண மலர்களுக்கு நடுவுல அருள் பாளிக்கிறாரே இவர் தான் காசி விஸ்வநாதர். இவர ஒருமுறை பார்த்துட்டா நம்ம துன்பங்கள் நீங்க மகிழ்ச்சி மட்டுமே நிறையும்ங்குறது ஐதீகம்.
சரி… விஸ்வநாதர தரிசிச்சாச்சு.. இன்னொரு முக்கியமான விசயத்தை உங்ககிட்ட சொல்லனும்னு நினைக்கிறோம். உங்கள்ல பலபேரு காசிக்கு வரணும்.. இதே மாதிரி தரிசிக்கணனும்னு தோணும். அப்படி வரவங்களுக்கு காசியிலயே குறைஞ்ச வாடகையில தங்குறதுக்கு இடமிருக்கா… இருக்கு… அது தான் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம். இங்க குறைஞ்ச வாடகையில தங்கவும் செய்யலாம், நம்ம தமிழ்நாட்டு சாப்பாட்ட குறைஞ்ச விலையில சாப்புடவும் செய்யலாம்.
கிட்டத்தட்ட 200 வருசங்களுக்கும் மேலாக தொண்டு பணிகளை செய்துவரக்கூடிய இந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் தான், காசி விஸ்வநாதர் கோயில்ல நடைபெறுற பூஜைக்கான பொருட்களையும் வழங்கக் கூடிய சிறப்ப பெற்றவர்களா இருக்குறாங்க.
உத்திரபிரதசேத்துல இந்த கோடிக்கணக்கான மக்களை திரட்டுனது கும்பமேளாவும் காசி விஸ்வநாதரும் தான். ஒரு சின்ன நகரம் இவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிக்கிறது அவ்வளவு சாதாரமானது இல்ல. அத சாத்தியப் படுத்துறதுக்கு பின்னால பல பேரோட உழைப்பு இருந்தாலும், அதுல ரெண்டு பேர குறிப்பிட்டே ஆகனும். ஒருத்தர் வாரணாசி மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம், இன்னொருத்தர் வாரணாசி மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் எழிலரசன். இந்த ரெண்டு பேருமே தமிழர்கள்.
நாம நிக்கிற இந்த வாரணாசி பிரதமர் மோடியோட சொந்த தொகுதி. எப்பவுமே அவரோட கண்பார்வையிலேயே இயங்குற தொகுதி. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொகுதியில ஆட்சியர் பொறுப்புல இருக்குற ராஜலிங்கம், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தான் தொடர்ந்து மூணாவது முறையா காசித் தமிழ் சங்கமத்தை வெற்றிகரமா நடத்திக் காட்டியிருக்காரு.. இந்த தொகுதிய முன்மாதிரி தொகுதியா மாத்துறதுக்கு பல்வேறு திட்டங்களையும் தீட்டியிருக்காரு.
விஸ்வநாதர் கோயிலைத் தாண்டி காசிக்கு இன்னொரு அடையாளமும் உண்டு. அது தான் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம். 1916 ஆம் வருசம் உருவான இந்த பழமையான பல்கலைக்கழகம் இன்னைக்கும் நாட்டுல சிறந்த பல்கலைக்கழகமாக திகழ்ந்துட்டு வருது. நடப்பு ஆண்டுல இங்க தமிழ் படிக்கிறவங்களோட எண்ணிக்கை உயர்ந்திருக்குறத உறுதிபடுத்துறாரு இந்த பல்கலைக்கழகத்தோட உதவிப் பேராசிரியர் ஜெகதீசன்.
அடுத்து நாம போகப்போற இடம் அனுமன் காட்… அப்படி அனுமன் காட்ல என்ன இருக்குனு நினைக்கிறீங்களா ? அது வேற ஒண்ணுமில்ல நம்ம மகாகவி பாரதி வாழ்ந்த வீடு தான். நம்ம பாரதியோட வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றங்கள ஏற்படுத்துனது அவர் காசியில இருந்த நாலு வருசம் தான். அந்த நாலு வருசமா அவர் இருந்த வீடு தான் இப்ப அனுமன் காட்டோட அடையாளம்.
உலகத்தோட மிகப்பழமையான நகரமான காசிக்கு வந்ததும், விஸ்வநாதர தரிசிச்சதும், இங்க இருக்க பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள பார்வையிட்டதும், மனசுக்கு நிறைவான உணர்வ தருது. இந்த செய்தியோட தொடக்கத்துல சொன்னதத்தான் திரும்பவும் சொல்லத் தோணுது. இந்துக்கள் ஒவ்வொருத்தரும் தன்னோட வாழ்நாள்ல ஒரு தடவயாவது போய் தரிசிக்க வேண்டிய புண்ணிய ஸ்தலம் இந்த காசி.