திருப்பூரில் இடைத்தரகர்களால் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூரில் இயங்கிவரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு திருப்பூருக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாங்கித் தருவதாக அழைத்து செல்லும் இடைத்தரகர்கள் சிலர் பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் புலம்பெயர் பெண்களுக்கு பாலியல் தொல்லையும் அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தன்னார்வ அமைப்பின் தலைவர் அலோசியஸ், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
புலம்பெயர் தொழிலாளர்களை ஆன்லைன் பதிவு மூலமாக ஆவணப்படுத்தி முழுமையாக கண்காணிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.