மும்மொழிக் கொள்கையில் தாய் மொழி கல்வி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தும் கூட பொய்யான பிரச்சாரத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானநத்தம் குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் வீடுகளுக்குச் நேரில் சென்று பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த காலத்தில் சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய தமிழக அரசு, சாராய விற்பனையை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்துக்கு எந்த ஒரு நிவாரணமும் அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.
உயிரிழந்தோரின் உடல்களை பெறுவதற்கு முன்பு நிவாரணம் வழங்கவும், அரசு வேலை வழங்கவும் அரசு அதிகாரிகள் உறுதி அளித்ததாகவும், ஆனால் உடலை அடக்கம் செய்த பின்பு எந்த பதிலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மிகவும் ஏழ்மையான குடும்பமாக உள்ள அவர்கள் குடியிருப்பதற்கு வீடு கூட இல்லாமல் இருப்பதாகவும், மத்திய அரசின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகட்டி கொடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மும்மொழி கிடையாது என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியை பாஜக திணிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து, ஏழை, எளிய மாணவர்கள் மூன்றாவது மொழியை படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் டெல்டா பகுதியில் மார்ச் மாதத்தில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த முடிவு செய்து, மாநிலத் தலைவரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.