நாமக்கல் மாவட்டம் கே.புதுப்பாளையத்தில் எம்.பி. நிதியில் சமுதாயக்கூடம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதியளித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் நாமக்கல்லுக்கு வருகை தந்தார். அப்போது, மாவட்ட பாஜக சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கே.புதுப்பாளையம் பகுதியில் உள்ள பாமா ருக்மணி சமேத பெருமாள் திருக்கோயிலில், எல்.முருகன் தனது பெற்றோருடன் சுவாமி தரிசனம் செய்தார். மேலும், அப்பகுதியில் தமது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சமுதாயக்கூடம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்ட அவர், 50 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து நாமக்கல்லில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் எல்.முருகன் கட்சி நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர்கள் சரவணன், ராஜேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.