திருச்சியில் நடந்த அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த LED திரையில் எதிர்பாராத விதமாக, முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் ஆகியோரின் படங்கள் வந்தது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில் மாவட்ட மக்கள் தொடர்பு வாட்ஸ் அப் குழுவில் இருந்து செய்தியாளர் நீக்கப்பட்டுள்ளார்.
திருச்சி இ.பி. சாலையில் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
புதிய கட்டட வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் திறந்து வைப்பதை காட்சிப்படுத்த LED திரை அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் அந்த LED திரைகளில் முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் ஆகியோரின் படங்கள் வந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது.
தொடர்ந்து அதற்கு எதிர்வினையாற்றியுள்ள மாவட்ட மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன், அரசு தொடர்பான செய்திகளை பகிர்ந்துகொள்ளும் மாவட்ட மக்கள் தொடர்பு வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து தமிழ் ஜனம் செய்தியாளர் தீபனின் வாட்ஸ் ஆப் எண்ணை நீக்கியுள்ளார்.
இந்நிலையில், தவறை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டதற்காக செய்தியாளரை வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து நீக்கியுள்ள செயல், பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானது என மூத்த பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.