விருதுநகரில் கனிமவள கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் வழங்கிய விவரங்கள் அடங்கிய டைரி குறிப்பு சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இ. குமரலிங்கபுரத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க தவறியதாக வருவாய் துறையினர், வேளாண் துறை அதிகாரிகள் உட்பட ஏழு பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார். இதனை கண்டித்து வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, வேளாண் உதவி அலுவலர் சஸ்பெண்ட் உத்தரவை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்தார்.
ஆனாலும் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கனிம வள கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக ஆளும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வருவாய் மற்றும் காவல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவரங்கள் அடங்கிய டைரி குறிப்பு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.