அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
மத்தியப்பிரதேச மாநிலம் சாதர்பூரில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் பாகேஷ்வர் தாம் புற்றுநோய் மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதிநவீன மருத்துவத் தளவாடங்களுடன் கட்டப்படும் இந்த மருத்துவமனையில், தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் பணியமர்த்தப் படுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 10 ஏக்கர் பரப்பளவில் நூறு படுக்கைகளுடன் இந்த மருத்துவமனையைக் கட்ட பொருளுதவி செய்த தீரேந்திர சாஸ்திரி சுவாமிக்கு நன்றி தெரிவித்தார்.
நிகழாண்டு பட்ஜெட்டில் புற்றுநோயைக் கட்டுப்படுத்த பல்வேறு அறிவிப்புகள் வெளியானதை மேற்கோள்காட்டிய பிரதமர் மோடி, அந்நோய்க்கான மருந்துகள் மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதாக கூறினார். மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.