சீனாவின் நிதியுதவியுடன் கட்டி முடிக்கப் பட்ட, பாகிஸ்தானின் புதிய மற்றும் மிகவும் விலையுயர்ந்த புதிய குவாதர் சர்வதேச விமான நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பயணிகள் இல்லாமல், விமானங்கள் வராமல் புதிய குவாதர் விமான நிலையம் ஒரு மர்மமாகவே உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மிகவும் கவர்ச்சி மிக்க கடற்கரை நகரமான (Gwadar) குவாதர் சந்தேகத்திற்கு இடமின்றி பாகிஸ்தானின் முக்கிய சுற்றுலாத் தலமாகும். பெரும்பான்மையாக மீனவ மக்களே (Gwadar) குவாதர் நகரில் வசிக்கின்றனர்.
2007ஆம் ஆண்டில் முன்னாள் ராணுவத் தலைவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் (Gwadar) குவாதர் துறைமுகத்தைத் திறந்து வைத்தார். (Gwadar) குவாதர் துறைமுகம் சீனாவால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த (Gwadar) குவாதர் துறைமுகத்தின் உட்பகுதி மற்றொரு ‘ஷென்சென்’ என்று என அழைக்கப்படுகிறது. சீனாவின் மூன்றாவது பெரிய நகரமாக (Gwadar) குவாதர் நகரம் மாறியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, சீனா தனது மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தை அரேபிய கடலுடன் இணைக்கும் திட்டத்தின்படி, பலுசிஸ்தான் மற்றும் குவாதரில் கால் பதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 2015ம் ஆண்டு CPEC எனப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டிலான, CPEC திட்டத்தின் மையப் புள்ளியாக (Gwadar) குவாதர் நகரம் மாறியிருக்கிறது.
பாகிஸ்தானின் குவாதர் (Gwadar) துறைமுகம், இந்தியாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்நிலையில், சீனா நிதியுதவியுடன் குவாதரில் ஒரு சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு, குவாதர் விமான நிலையத் திட்டத்துக்குப் பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்தது. 2019ஆம் ஆண்டு, இந்த சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின், குவாதர் விமான நிலையம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இந்த விமான நிலைய கட்டுமானத்தில் சீனா 90 சதவீதமும், ஓமன் 10 சதவீதமும் முதலீடு செய்துள்ளது.
குவாதர் விமான நிலையம் 240 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குவாதர் விமான நிலையம், பாகிஸ்தானின் மிகப்பெரிய விமான நிலையமாகும். ஆண்டுதோறும் 4,00,000 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாகும்.
இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா, கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு முன்னதாக, கடந்த ஜூலை மாதம், பலூச் ஏக்தா சமிதி (Baloch Ekta Samiti) தொடர் போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. தொடர்ந்து, பலுசிஸ்தானில் 13 இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தன. பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தற்கொலைத் தாக்குதல்களும் நடந்தன.
குவாதர் மாகாணத்தில் ஏற்கெனவே நான்கு விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் ஓட்மாரா, ஜிவ்னி மற்றும் பஸ்னி ஆகிய மூன்று விமான நிலையங்கள் செயல்படவில்லை.மேலும், பலுசிஸ்தானில் உள்ள பஞ்ச்கோர், துர்பத் கஸ்தார் மற்றும் தால்பந்தேன் ஆகிய இடங்களில் உள்ள பிற விமான நிலையங்களும் செயல்படும் நிலையில் இல்லை.
இந்நிலையில், புதிதாக அதிக செலவில் கட்டப்பட்டுள்ள இந்த குவாதர் சர்வதேச விமான நிலையமும் பயணிகள் ,மற்றும் விமானங்கள் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது.
தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப் படாத குவாதர் நகரில் மின்சாரம் இல்லை.தேவையான மின்சாரத்துக்கு, பக்கத்து நாடான ஈரானையோ, சூரிய மின்னாற்றலையோ தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது.
மேலும், நகரில் போதுமான சுத்தமான குடிநீர் தண்ணீர் இல்லை. 4,00,000 பயணிகள் பயணிக்கக்கூடிய இந்த சர்வதேச விமான நிலையத்தால் ,குவாதர் நகரத்தின் வாழும் 90,000 மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்று கூறப் படுகிறது.
குவாதர் விமான நிலையம், பாகிஸ்தானுக்கோ அல்லது குவாதருக்கோ பயன்தரும் திட்டம் அல்ல என்றும், மாறாக சீனாவுக்குப் பயன் தரும் திட்டம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குவாதரில் வசிக்கும் ஒருவர் கூட இந்த விமான நிலையத்தில் பணியமர்த்தப்படவில்லை. குறிப்பாக காவலாளியாகக் கூட பணியமர்த்தப்படவில்லை என்று, பலுசிஸ்தான் அவாமி கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல் கஃபூர் ஹோத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் முதலீடுகளைப் பாதுகாக்க பாகிஸ்தான் அரசு ஆர்வமாக உள்ளது. பலுசிஸ்தான் மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்த குவாதரில் தனது இராணுவ இருப்பை அதிகரித்துள்ளது.
சீனத் தொழிலாளர்கள் மற்றும் பாகிஸ்தான் விஐபிக்கள் பாதுகாப்பாகச் செல்வற்காக, கிட்டதட்ட வாரத்தில் ஏழு நாட்களும்,எந்த நேரத்திலும் சாலைகள் மூடப் படுகின்றன. குவாதருக்கு வருகை தரும் பத்திரிகையாளர்கள் உளவுத்துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப் படுகின்றனர்.
மாற்றம் வரும், மக்கள் வாழ்வாதாரம் உயரும் என்று, பாகிஸ்தான் தந்த வாக்குறுதிகள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதையால் குவாதர் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது கண்கூட தெரிகிறது.
உள்ளூரில் நடந்து வரும் போராட்டம் மற்றும் வன்முறைகளுக்கு மத்தியில்,புதிய குவாதர் சர்வதேச விமான நிலையம் ஒரு மர்மமாகவே உள்ளது.