மகா கும்ப மேளாவில் இதுவரை 62 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. இந்திய விமானப்படை மற்றும் AAI இணைந்து இயக்கும் பிரயாக்ராஜ் விமான நிலையம் பயணிகள் போக்குவரத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் மிகப் பெரிய இந்துமத பண்டிகையான மகா கும்ப மேளா 26ம் தேதி நிறைவு பெறுகிறது. 45 நாட்கள் நடைபெற்ற பிரமாண்ட இந்து மத திருவிழாவில் கலந்து கொள்ள உலகமெங்கும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை 62 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானவர்கள் இரவும் பகலும் இந்த திரிவேணி சங்கமத்தில் நீராடினர்.
மகா கும்ப மேளாவின் நிறைவு நாள் நெருங்கி வரும் நிலையில், பிரயாக்ராஜில் உள்ள விமான நிலையம் உட்பட பொதுப் போக்குவரத்து நிலையங்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2018ம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி, பிரதமர் மோடியால் பிரயாக்ராஜ் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் விமான நிலையம் செயல்பட தொடங்கியது.
மகா கும்ப மேளாவுக்காக, பிரயாக்ராஜ் விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையத்தின் முனையம் 6,700 சதுர மீட்டரிலிருந்து 25,500 சதுர மீட்டராக விரிவுபடுத்தப் பட்டுள்ளது. இதனால், PEAK HOUR களில் 1,080 பயணிகள் சிரமமின்றி வந்து செல்ல முடிந்தது.
கூடுதலாக மேலும் 1,600க்கும் மேற்பட்ட பயணிகளை தங்க வைக்க ஒரு புதிய முனையக் கட்டிடமும் திறக்கப்பட்டது. 17 நகரங்களுடன் பிரயாக்ராஜை இணைக்கும் விமானங்கள் எண்ணிக்கை இதனால் அதிகமாகியுள்ளன.
கடந்த டிசம்பரில், பிரயாக்ராஜ் விமான நிலையம் வெறும் எட்டு நகரங்களுடன் தான் இணைக்கப்பட்டிருந்தது கடந்த ஜனவரியில் தான் 60க்கும் மேற்பட்ட புதிய விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் விமான நிலைய பார்க்கிங் திறன் 200-லிருந்து 600 வாகனங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் செக்-இன் கவுண்டர்கள் 8 லிருந்து 42 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளன.
விமான நிலையத்தில், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், குழந்தை பராமரிப்பு அறை மற்றும் குறைந்த விலை உதான் யாத்ரி கஃபே உட்பட உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சராசரியாக 148 திட்டமிடப்பட்ட வணிக பயணிகள் விமானங்களை விட அதிக விமானங்கள் பிரயாக்ராஜ் விமான நிலையம் வந்து செல்கின்றன. பொதுவாக, பிரயாக்ராஜில் இயக்கப்படும் விமான எண்ணிக்கையை விட இது ஏழு மடங்கு அதிகமாகும். மகா கும்பமேளாவுக்கு முன்பு, ஒரு நாளைக்கு 16 விமானங்களே இயங்கி வந்தன. இதில் ஆயிரத்துக்கும் குறைவான பயணிகள் பயணம் செய்தனர்.
2019 ஆம் ஆண்டு,மகா கும்பமேளாவின் போது ஒரு லட்சத்துக்கும் குறைவான பயணிகளைக் கையாண்ட இந்த விமான நிலையத்தில் பயணிகள் வருகை ஏற்கனவே மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது.
பிப்ரவரி 1ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மட்டும், 1,288 விமானங்களில் மொத்தம் 214,593 பயணிகள் வந்து சென்றுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 13,412 பயணிகளையும் 81 விமானங்களையும் பிரயாக்ராஜ் விமான நிலையம் கையாண்டுள்ளது.
பிப்ரவரி 13 ஆம் தேதி, 96 விமானங்களில் 16,310 பயணிகள் வந்து சென்றனர். பிப்ரவரி 16 ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை 20,297 என உயர்ந்தது.
பிப்ரவரி 21ஆம் தேதி மட்டும், ஒரே நாளில் பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து 236 விமானங்களில் 24,512 பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
மகா கும்பமேளா தொடக்க நாளான ஜனவரி 13ம் தேதி, 33 விமானங்களில் 4,252 பயணிகளை பிரயாக்ராஜ் விமான நிலையம் நிர்வகித்தது.
மேலும், ஜனவரி 13 முதல் பிப்ரவரி 16 வரை 1,974 விமானங்களில் 3 லட்சத்து 12,536 பயணிகள் வந்து சென்றுள்ளனர். அதாவது, தினமும் 57 விமானங்கள் மற்றும் சராசரியாக 8,929 பயணிகள் என்று விமான நிலைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உட்பட பல்வேறு மாநில ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகள் சர்வதேச நாடுகளின் தலைவர் மற்றும் அரசு பிரதிநிதிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் மகா கும்ப மேளாவில் கலந்து கொண்டுள்ளனர்.
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கௌதம் அதானி, Pawan Kant Munjal அனில் அகர்வால், உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்களும் திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடியுள்ளனர். மேலும், கத்ரீனா கைஃப், அக்ஷய் குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் மகா கும்ப மேளாவில் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக, அமெரிக்க கோடீஸ்வரரும் ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியுமான லாரன் பவல் ஜாப்ஸ், தனி விமானத்தில் பிரயாக்ராஜ் வந்தார். இந்து முறைப்படி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு செய்தார்.
1932ம் ஆண்டு அலகாபாத்திலிருந்து லண்டனுக்கு கடைசி விமானம் புறப்பட்டது. 93 ஆண்டுகளில் பிரயாக் ராஜில் இருந்து இயக்கப்பட்ட முதல் சர்வதேச விமானம் இதுவாகும்.
பாரத பாரம்பரியத்தின் அடையாளமாகவும், ஒற்றுமையின் சின்னமாகவும் விளங்கும் மகா கும்ப மேளா ,பல சாதனைகளை படைத்துள்ளது.