தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கெட்அவுட் கையெழுத்து இயக்கத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக நிர்வாகிகள் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாத் கிஷோருடன் தவெக தலைவர் விஜய் விழா மேடைக்கு வந்தார். பின்னர், மேடையின் கீழே வைக்கப்பட்டுள்ள பேனரில் கெட்அவுட் கையெழுத்து இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து நாட்டுப்புற பாடலுடன் தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது. அப்போது, கிடாக்குழி மாரியம்மாள் குழுவினர் விஜய் குறித்தும், கட்சி குறித்து பாடல் பாடினர்.
இதனிடையே, தவெக ஆண்டு விழா கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. செய்தியாளர்கள் காட்சிகளை ஒளிபதிவு செய்தபோது அங்கிருந்த பவுன்சர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து தவெக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் காயமடைந்த செய்தியாளர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.