ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒழுங்குமுறைப்படுத்த, அரசு வகுத்த விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிஷ்டம், சூதாட்டம் தொடர்பான ஆன் லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது.
அதேசமயம், திறமைக்கான ஆன் லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த விதிமுறைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசுத்தரப்பில், ஆன் லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி, சொத்துக்களை இழந்ததால் தான், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.