போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் ஆரம்பித்து புதுச்சேரியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான அசோகன் என்பவர் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். தனக்கு கிடைத்த ஒய்வூதியத்தை கிர்ப்டோ கரன்சியில் முதலீடு செய்ய முடிவெடுத்த அசோகன், அஷ்பே என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
இதனிடையே, கோவை மற்றும் மகாபலிபுரத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் துவக்க விழாவிற்கு சென்ற அசோகன், அங்கு நடிகைகள் தமன்னா, காஜர் அகர்வால் உள்ளிட்ட சில திரை நட்சத்திரங்களை கண்ட மகிழ்ச்சியில், மேலும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து, புதுச்சேரியைச் சேர்ந்த தமது நண்பர்கள் 10 பேரையும் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் மூதலீடு செய்ய வைத்துள்ளார்.
இதன் பின்னர் கிரிப்டோ கரன்சியில் இருந்த 9 கோடி ரூபாயை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தபோது பணம் வராததால் தாம் ஏமாற்றப்பட்டதை அசோகன் அறிந்துள்ளார்.
இது தொடர்பாக அசோகன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், கோவையைச் சேர்ந்த நித்தீஷ் ஜெயின், அரவிந்த் குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.