நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, 9-ம் வகுப்பு மாணவனை அடித்துக்கொன்ற சக மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராசிபுரத்தில் உள்ள சிவானந்தா சாலையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் கவின்ராஜ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்தார். கழிவறைக்கு சென்ற மாணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது மாணவர் மயங்கிய நிலையில் கிடந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மாணவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், மாணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அதில், உயிரிழந்த கவின்ராஜை, பயன்பாட்டில் இல்லாத கழிவறையில் வைத்து, பரத் என்ற சக மாணவர் தாக்கியதாகவும், இதில் கவின்ராஜ் மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவன் பரத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த மாணவனின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதுவரை சடலத்தை பெற மாட்டோம் என அவர்கள் எச்சரித்தனர்.