எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்குவதில் மட்டும் திமுக அரசு தெளிவாக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திருக்கழுக்குன்றத்தில் அதிமுக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆட்சியின் அவலங்கள் மக்களுக்கு தெரியக்கூடாது என எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்குவதில் மட்டும் திமுக அரசு தெளிவாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், ஆக்கப்பூர்வமாக ஆட்சி செய்து மக்களைக் காக்கும் எண்ணம் திமுக அரசுக்கு துளியும் இல்லை என விமர்சித்துள்ளார்.
மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பே அதிமுகவினர் கைது செய்ப்பட்டிருப்பது கோழைத்தனத்தின் உச்சம் என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.