பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமித்ததை எதிர்த்து அச்சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா எனவும், பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என்றும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசின் நிலைபாட்டை தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, பள்ளி – கல்லூரிகளில் நடக்கும் சாதிய வன்முறைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையம், பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க பரிந்துரைத்துள்ளதை சுட்டிக்காட்டி,
பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம் என கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என கெடு விதித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.