மதச்சார்பின்மை பேசிக் கொண்டு மதத்தின் அடிப்படையில் ஒருதலைபட்சமாக தமிழக அரசு செயல்படுவதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரம்ஜான் நோன்பு கஞ்சிக்காக 7 ஆயிரத்து 920 மெட்ரிக் டன் தரமான பச்சரிசியை மசூதிகள், தர்காக்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இதுவரை அளித்ததை விட 30 சதவீதம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக இஸ்லாமியர் ஓட்டுகளை குறிவைத்து மக்கள் வரிப்பணத்தை திமுக அரசு வாரி இறைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ்வார்க்கும் நிகழ்ச்சிக்கு உதவி செய்ய தமிழகத்தை ஆண்ட கட்சிகளுக்கு மனமில்லை என குறிப்பிட்டுள்ள அவர், ரம்ஜான் நோன்பிற்கு தரும் அரிசியை, மசூதிகளுக்கு ஏன் தர வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சிக்கு வந்தவுடன் கோயில் திருப்பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் எனக்கூறிய தமிழக அரசு, திருப்பணிகளுக்கு நிதி ஒதுக்கியதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மதச்சார்பற்ற அரசு என பேசிக் கொண்டு, மதத்தின் அடிப்படையில் திமுக அரசு பாரபட்சமாக செயல்படுவதை கண்டிக்கிறோம் எனவும் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.