மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள களைச் செடிகளை அகற்றுவதற்கும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்தின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் ட்ரோன்கள் குறித்தும் அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயத் தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடவு, உழவு, களை என அனைத்து பணிகளும் இயந்திரங்கள் மூலமாகவே நடைபெற்று வருகிறது.
முற்றிலும் இயந்திரங்களின் உதவியுடன் நடைபெறும் விவசாயத்தால் களைச் செடிகளும் அதிகளவு வளர்வதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. களைச் செடிகளை கட்டுப்படுத்துவதோடு, பூச்சிகளையும் அழிப்பதற்கும் ட்ரோன்கள் உதவியோடு பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது.
பயிரின் பரப்பளவு மற்றும் களைச் செடிகளை களைவதற்கும் ட்ரோன்களை பயன்படுத்துவது, வேளைப்பளுவோடு நேரவிரயத்தையும் குறைக்கும் வகையில் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 15 ஆட்கள் தேவைப்படும் இடத்தில் மூன்று ஆட்கள் மற்றும் ஒரு ட்ரோனுக்கு வாடகை கொடுத்தால் மட்டுமே போதுமானதாக உள்ளதாக கூறுகின்றனர் விவசாயிகள்.
ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பூச்சிக் கொல்லி மருந்து அடித்து வந்த நிலையில், தற்போது ஆயிரத்தி ஐநூறு ரூபாய் மட்டுமே போதுமானதாக இருப்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தொடக்கத்தில் ட்ரோன்களை பயன்படுத்த தயங்கிய விவசாயிகள், அதன் மூலம் கிடைத்த பலன்களை அறியத் தொடங்கிய பின் ஆர்வத்துடன் தற்போது அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், விவசாயமும் அதில் ஒரு அங்கமாக மாறியிருக்கிறது. கால விரயம், வேளைப்பளு ஆகியவற்றோடு செலவையும் குறைக்கும் இந்த ட்ரோன்கள் வருங்காலத்தில் விவசாயப் பணிகளில் இன்றியமையாத சக்தியாக விளங்கும்.