ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக மலைகள் வெண்போர்வை போர்த்தியதுபோல காட்சியளிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், துலைல் பள்ளத்தாக்கு, தோடா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக சாலைகள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.
இதனிடையே, தோடா பகுதியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக காண்டோ பலேசா மலைப் பகுதி வெண்போர்வை போர்த்தியதுபோல காட்சியளிக்கிறது. பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, ஸ்ரீநகர் விமான நிலையத்தின் ஓடுபாதை பனிப்பொழிவால் நிரம்பி காணப்பட்டது. ஓடுபாதையில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டது.
இமாச்சலப்பிரதேச மாநிலம், லாஹௌல் மற்றும் ஸ்பிதி பகுதிகளில் மீண்டும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வீடுகளிலும், தங்கும் விடுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் படர்ந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், வீடுகள் மற்றும் மலைகள், மரங்கள் மீது பனிப்படர்ந்து காட்சியளிக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.