பெஞ்சல் புயல் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள், காலவதியான நிலையில் கிடக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை பெஞ்சல் புயல் அச்சுறுத்தியது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர், மனம் பூண்டி, தேவனூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
அங்குள்ள மக்களுக்கு வழங்க பல்வேறு ஊர்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வகையில், மனம்பூண்டி ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த நிவாரணப் பொருட்கள் முழுமையாக மக்களுக்கு வழங்கப்படாத காரணத்தால், காலவதியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது புதுக்கோட்டை மாநகராட்சி மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட பிரெட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலையில் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்குள்ள மேலும் பல பெட்டிகளில் இருக்கும் நிவாரணப் பொருட்களும் இதே நிலையில் இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.