டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை முழுவதுமாக கணக்கிடப்படவில்லை என தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் இதுவரை கணக்கிடப்படாததால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் பி.கே.மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவில் கூறியுள்ளபடி டெல்லி ரயில் நிலைய விபத்தில் உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், உங்களுக்கு இதில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தன்னுடைய குற்றச்சாட்டு தொடர்பான வீடியோக்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளதாக மனதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் நீங்கள் சொல்லும் அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது என கூறவில்லையே என்று தெரிவித்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.