உக்ரைனை 100 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய கடனில் ஆழ்த்தும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக கூறிவந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளார். உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களுக்கு அமெரிக்கா குறி வைப்பது ஏன் ? அந்த கனிமங்களின் முக்கியத்துவம் என்ன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நவீன தொழிற்துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படும், வேதியியல் ஒற்றுமை கொண்ட 17 கனிமங்கள் “அரிய புவி கனிமங்கள்” (Rare Earths) எனப்படும். சுத்தமான நிலையில் இந்த கனிமங்களைக் கண்டெடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பதால் இவை, “அரிய புவி கனிமங்கள்” (Rare Earths) எனப்படுகிறது.
மின்சார கார்கள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை உயர்தர அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு இந்த அரிய வகை கனிமங்கள் முக்கிய மூலப் பொருட்களாக உள்ளன. முக்கியமாக செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை கட்டமைப்பதிலும் இந்த கனிமங்கள் பங்கு வகிக்கின்றன
இந்த அரிய வகை கனிமங்கள் தோரியம், யுரேனியம் போன்ற கதிர்வீச்சு கூறுகளுடன் சேர்ந்தே இருக்கின்றன. இவற்றை பிரித்தெடுக்க சில நச்சு வேதிப்பொருட்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த கனிமங்களின் உற்பத்தி செலவு மிக அதிகமாகிறது.
உக்ரைன் ஐரோப்பாவின் மிகப்பெரிய கனிம இருப்புக்கள் கொண்ட ஒரு நாடாகும். உக்ரைன் நாட்டில் 100-க்கும் மேற்பட்ட மிக முக்கியமான கனிம வளங்கள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் முக்கியமானவை என வகைப்படுத்தும் 34 கனிமங்களில் 22 கனிமங்கள் உக்ரைனில் தான் உள்ளன.
உக்ரைனில் உள்ள 70 சதவிகித அரிய வகை கனிமங்கள், டொனெட்ஸ்க் (Donetsk), நிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk), லுஹான்ஸ்க் (Luhansk) பகுதிகளில் உள்ளன. உக்ரைனில் 450,000 டன் லித்தியம் இருப்புகள் உள்ளது. இவற்றை வெட்டி எடுப்பதற்கான திட்டங்கள் இருந்தாலும், ரஷ்யாவுடனான போர் காரணமாக அவை செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.
உக்ரைனின் 70 சதவிகித அரிய வகை கனிமங்கள் உள்ள பகுதிகள் ,ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ளன. குறிப்பாக , லித்தியம் உள்ள பகுதிகள் எல்லாம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
உலக நாடுகள், உக்ரைனில் உள்ள மதிப்பு மிக்க கனிமங்களைப் பெற முடியாமல் உள்ளன. அதற்கு, உக்ரைனின் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையே காரணமாகும்.
உக்ரைன் கனிமங்களுக்கு அதிபர் ட்ரம்ப் குறி வைப்பதற்குப் பின்னால் அமெரிக்க-சீனா போட்டி உள்ளது என்று கூறப்படுகிறது. முக்கியமான கனிமங்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் சீனாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
உலக அளவில், 90 சதவீத அரிய வகை கனிமங்களும்,75 சதவீத லித்தியம் மற்றும் கோபால்ட்டும், 35 சதவீத நிக்கலும் சீனா வைத்திருக்கிறது. மேலும், ஆப்பிரிக்கா, ஆசியா, தென்அமெரிக்க நாடுகளில் உள்ள சுரங்கங்களின் உரிமையையும் சீனா வைத்துள்ளது. இப்படி, Rare Earth Elements மற்றும் முக்கிய உலோகங்களை உலகெங்கும் உற்பத்தி செய்து வழங்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது.
சீனப் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்ததோடு, அமெரிக்க தொழில்நுட்பத்தைச் சீனா பெறுவதையும் அதிபர் ட்ரம்ப் தடை செய்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அரிய பல கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்குச் சீனா தடை விதித்தது.
மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கைகளை (renewables policies) ஒதுக்கிவிட்டு, படிம எரிபொருள் (fossil fuel) உற்பத்தியை விரிவாக்கம் செய்யவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில், பசுமை எரிசக்திக்கு மாறுவதற்கான அரிய கனிமங்களை கைப்பற்ற ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். உலகின் முக்கியமான கனிமங்களைப் பெற மாற்றுவழியை அமெரிக்கா தேடியது. சீனாவைச் சமாளிக்க உக்ரைன் தான் மாற்று என அமெரிக்கா முடிவுக்கு வந்துள்ளது.
உக்ரைனுடனான கனிம ஒப்பந்தத்தின் மூலம், அதிபர் ட்ரம்ப் புவிசார் அரசியலையே மாற்றியமைத்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். மேலும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையைத் தலை கீழாக மாற்றியமைத்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப் அரசில், அமெரிக்காவின் உதவிகள் இனி யாருக்கும் கிடைக்கப் போவதில்லை. திருப்பித் தர வேண்டும் என்ற நிபந்தனை இல்லாத நல்லலெண்ண உதவிகள் என்பது முடிந்து போன விஷயமாகிவிட்டது. மனிதாபிமான உதவியானாலும், வர்த்தக ரீதியிலான உதவியானாலும், இனி அமெரிக்கா வட்டியுடன் வசூல் செய்து விடும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் புதிய வெளியுறவு கொள்கை உக்ரைனில் இருந்துதொடங்குகிறது. வரும் மாநாடுகளில், உலகெங்கிலும் “அமெரிக்காவுக்கு முன்னுரிமை” என்ற கோட்பாடுகளை ட்ரம்ப் செயல்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.