முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற தடைகோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், எஸ்.வி.என்.பட்டி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனுமதி கோரிக்கை கோப்பு ஆளுநர் வசம் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராஜேந்திர பாலாஜி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் என இதற்கு முன்னர் கூறியது என்ன ஆனது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆளுநரிடம் ஒப்புதல் பெற என்ன முயற்சி எடுத்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.
ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக எதுவும் விவரிக்க இயலாத சூழலில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறியதை அடுத்து, வழக்கு விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கக்கோரி பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கின் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அறிக்கையை மனுதாரர் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.