டெல்லியில் நடைபெற்ற சூஃபி இசைத் திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்தார்.
டெல்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும், கலைஞருமான முசாபர் அலி தொகுத்து வழங்கும் இசைத்திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த இசைத்திருவிழா இன்று வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், விழாவின் தொடக்க நாளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது இசை நிகழ்ச்சியை கையில் தாளம் போட்டு பிரதமர் மோடி கேட்டு ரசித்தார்.
இதனைதொடர்ந்து பேசிய அவர், இது போன்ற நிகழ்வுகள் நாட்டின் கலாசாரம் மற்றும் கலைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்ல, அவற்றின் மூலம் ஒரு நிம்மதியை உணர்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்த அவர், இந்த நிகழ்ச்சி மக்களின் இதயங்களில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.