ஈரோடு அருகே, அரசு பேருந்தில் ஏற்பட்ட கோளாறை, போக்குவரத்து பணியாளர்கள் முறையாக சரிசெய்யாததால், மீண்டும் பழுதாகி பாதி வழியில் நின்றதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கோவை மண்டலத்தின் திருப்பூர் கிளை சார்பில் பழனியில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூருக்கு அரசு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. ஈரோடு நோக்கி பேருந்து வந்தபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து, ஈரோடு கிளைக்கு சென்று பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் மேட்டூருக்கு பேருந்து புறப்பட்டு சென்ற நிலையில், பேருந்தின் மெயின் லீஃப் உடைந்து முன் சக்கரம் சிக்கிக்கொண்டது.
இதனால் பேருந்திலிருந்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்காமல், பொது மக்களின் உயிருடன் போக்குவரத்து கழக அதிகாரிகள் விளையாடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.