உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடந்த கடுமையான வாக்குவாதத்திற்கு பின் அவரை, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா – ரஷ்யா நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு கடந்த வாரம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின்போது ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. குறிப்பாக உக்ரைனுக்கு எதிரான பல விஷயங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் அமெரிக்கா உக்ரைனுக்கு பல கட்டுப்பாடுகள் விதித்ததாகவும் கூறப்படுகிறது.
இது உக்ரைனை கோவப்படுத்திய நிலையில், அந்நாட்டுக்கு வழங்கிய 500 பில்லியன் டாலர் நிதியில் பாதிக்கு மேல் திருப்பிக் கொடுக்குமாறு அமெரிக்கா கூறி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நேற்று அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு மோதலில் முடிந்தது, பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்க துணை அதிபர் ஜெடி வான்ஸை குறிவைத்து அதிபர் ஜெலன்ஸ்கி பல கேள்விகளை முன்வைத்ததே இந்த மோதலுக்குக் காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யா – உக்ரைன் இடையே போரை நிறுத்த அமெரிக்கா ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு இடையூறு விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது உக்ரைனுக்கே அழிவை விளைவிக்கும் எனவும் துணை அதிபர் வான்ஸ் எச்சரித்தார்.
இதில் கோபமான ஜெலன்ஸ்கி 2019-ல் இருந்து ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில், அவர்களை தடுக்காமல் நீங்கள் எதை ராஜாங்க நடவடிக்கை என்று குறிப்பிடுகிறீர்கள் என்று வினவினார். மேலும், அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடல் இருப்பதால் அமெரிக்காவுக்கு ஆபத்தில்லை என்று அர்த்தமல்ல என குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, வருங்காலத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவால் ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்தார்.
இதனிடையே ஓவல் அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலுக்குப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.