கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழர் மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் தவிக்கும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தாக தெரிவித்துள்ளார்.
1974 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அநியாயமான ஒப்பந்தத்தால் நமது வறியநிலை மீனவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்ததாக அவர் கூறியுள்ளார்.
அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருவதாகவும், இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் என்றும், இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், எனறும் அவர் கூறியுள்ளார். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாக, மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாக, ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, 1974-இல் நடந்த தவறுக்கு சம பொறுப்பு, அன்றைய மத்திய ஆட்சி கூட்டணியில் இருந்த இன்று மாநிலத்தை ஆளும் கட்சிக்கும் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.