பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுக முன்கூட்டியே தேர்வு மையத்தை அடைய வேண்டும் என்றும், ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து எளிதாகத் தெரிந்தவற்றுக்கு விடை எழுதத் தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
ஒரு கேள்வி சவாலானதாக உணர்ந்தால் ஆழமாக பெருமூச்சு விட்டு சில நொடிகள் அமைதி காத்தால் தெளிவாகும் நமது மனம், விடைகளை கண்டுபிடிக்கும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உணர்வுப்பூர்வ ஆதரவு முக்கியம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டி உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்தேர்வுகள் உயர்க் கல்விக்கும், வாழ்க்கைக்கும் மிக முக்கியமான அடித்தளம் என்றும், மாணவர்கள் தேர்வினை மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள் உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும் என்று கூறியுள்ள அவர், பதற்றமின்றி உற்சாகத்துடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், உடல்நலம், தூக்கம், உணவு மற்றும் மனநிலையை கவனித்துக் கொள்ளுமாறும் மாணவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், உங்கள் கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எந்த அச்சமும் இன்றி, தங்களின் கல்வித்திறனை தேர்வெனும் களத்தில் சிறப்பாக வெளிக்காட்டி அனைவரும் சிறப்பான முறையில் வெற்றி பெற்று கனவுகள் மெய்ப்பட வாழ்த்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வை சந்திக்கும் அனைவருமே வெற்றியாளர்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.