உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்திற்கு வருகை தந்தார். வனத்துறை மூத்த அதிகாரிகளுடன் திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி லயன் சஃபாரி மேற்கொண்டார்.
அப்போது, எந்தவித பாதுகாப்பு கவசம் இன்றி அவர் பயணம் செய்தார். லயன் சஃபாரியின்போது பிரதமர் மோடி எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக பிரதமர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், இன்று காலை, உலக வனவிலங்கு தினத்தன்று, ஆசிய சிங்கங்களின் தாயகமான கிர் வனப்பகுதியில் சஃபாரி சென்றதாக தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வராக இருந்தபோது நாங்கள் கூட்டாகச் செய்த பணிகள் நினைவுக்கு வந்ததாகவும், பல ஆண்டுகளாக, கூட்டு முயற்சி காரணமாக ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதை உறுதி செய்துள்ளதாகவும் கூறினார். ஆசிய சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடி சமூகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் பங்கும் பாராட்டத்தக்கது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.