தமிழகத்தில் சாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பட்டியலினத்தின் ஒரு பிரிவான ஹிந்து கொண்டா ரெட்டி சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்ததது. அப்போது, தமிழக அரசு தரப்பில், தமிழகத்தை சேர்ந்த பிரதீபா என்பவர் தன் மகனுக்கு ஹிந்து கொண்டா ரெட்டி சமூகத்துக்கான சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார் என்றும், வட்டாட்சியர் முறையான விசாரணை மேற்கொண்ட போது, அந்த பெண் பட்டியலின சமூகத்தை சார்ந்தவர் அல்ல என்பது தெரியவந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும், அந்த பெண்ணின் மகனுக்கு ஹிந்து கொண்டா ரெட்டி சமூக சாதி சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில், போலி சாதி சான்றிதழ் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என்றும், போலி சான்றிதழ் வழங்கும் விவகாரத்துக்கு பின்னால் மிகப்பெரிய மோசடி நடப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், பட்டியலினத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ள சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து மாநில அளவிலான ஆய்வுக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.