நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தாய் உயிரிழந்த நிலையிலும், மகன் பிளஸ் 2 தேர்வெழுத சென்ற நிலையில் அவருக்கு எப்போதும் துணை நிற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி – சுபலட்சுமி தம்பதியின் மகன் சுனில்குமார், 12ம் வகுப்பு பயின்று வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட சுபலட்சுமி மகனை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், சுபலட்சுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்தார். இந்த சோகத்திலும் சுனில்குமார் ப்ளஸ்-டூ தேர்வு எழுத முடிவெடுத்தார். அவர் தனது தாயிடம் ஆசிப்பெற்றுவிட்டு தேர்வெழுத சென்றது அனைவரையும் கண்கலங்க செய்தது.
பின்பு தனது தாயின் இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர் சுனில் குமாரிடம் பேசியதாக தெரிவித்தார். மாணவரின் சகோதரனாக துன்பத்தை பகிர்ந்துகொண்டதாகவும் “தைரியமுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.
எப்போதும் துணை நிற்போம்” என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் செய்தியையும் தெரிவித்தாகவும் கூறியுள்ளார். சுனில்குமார் கல்வியின் மூலம் வாழ்வில் வெற்றியடைய வேண்டும், அம்மாவின் பெரும் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும் எனவும் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார்.