ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புதுவிதமான மர்ம நோயினால் 60-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அழுகை நோய் என்று பெயரிடப்பட்டுள்ள இத்தொற்றுநோய் எங்கிருந்து தோன்றியது என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கொரொனா தொற்று நோய் வந்ததில் இருந்து, ஒவ்வொரு நாளும் புது புது வைரஸ்கள் உருவாகி வருகின்றன. புதிய மர்ம நோய்களால் நாள்தோறும் உலகமெங்கும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் MPOX தொற்று நோய் மக்களை பாதித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் மற்ற நாடுகளுக்கும் எச்சரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம், காங்கோ ஜனநாயகக் குடியரசில், ‘Disease X’ என்னும் மர்ம நோயால், சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்த மர்ம நோய்க்கு குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் வடமேற்குப் பகுதியில் புதுவிதமான ஒரு மர்மநோய் பரவி வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள இரண்டு தொலைதூர கிராமங்களான போலோகோ மற்றும் போமேட் ஆகியவற்றில் கடந்த மாதத்தில் மர்ம நோய் பாதிப்புகள் திடீரென அதிகரித்தன.
கடந்த ஜனவரி 21 ஆம் தேதி, வெளவால் கறியைச் சாப்பிட்ட 48 மணி நேரத்துக்குள், 5 வயதான மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். (Crying Disease) அழுகை நோய் என அழைக்கப்படும் இந்த மர்மநோய்க்கு, 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். வேகமாக பரவி வரும் இந்த அழுகை நோய்க்கு இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
போலோகோ கிராமத்தில் அழுகை நோய் பரவலுக்கு வௌவால் இறைச்சியை உட்கொண்டதே காரணம் என்று கண்டறிய பட்டுள்ளது. ஆனால் போமேட் கிராமத்தில், நிலைமை இன்னும் சிக்கலாக உள்ளது. சுமார் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், பெரும்பாலும் மலேரியா உட்பட பல்வேறு நோய்க்கான அறிகுறிகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அழுகை நோய்க்கான காரணம் தன்மையும் கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காய்ச்சல், வாந்தி, உள் ரத்தப்போக்கு போன்ற ஆரம்ப கால அறிகுறிகள் இருப்பதாகவும், நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது உடல்வலி, கழுத்து மற்றும் மூட்டு வலி, மூச்சு வாங்குதல், வியர்த்துக் கொட்டுதல், தீவிர தாகம் ஆகியவை ஏற்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளிடம் இடைவிடாத அழுகையும், ரத்த வாந்தியும் ஏற்படுவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் டெங்கு, மார்பர்க், மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய வைரஸ்களில் தென்படக்கூடிய அறிகுறிகள் எல்லாம் இந்த மர்ம நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் தென்படுவதாகவும் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சோதனை கருவிகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களுடன் நிபுணர்கள் குழுவை உலக சுகாதார அமைப்பு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அழுகை நோய் பரவியுள்ள பகுதியில் மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை. குறிப்பாக, அருகில் மருத்துவமனைகள் எதுவும் இல்லை. எனவே, உடனடியாக மருத்துவச் சிகிச்சை வழங்க முடியாத சூழல் உள்ளது.
மேலும், அழுகை நோயால் பாதிக்கப் பட்டவர்களைத், தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழுக்களாக நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
இந்த நோய்க்கான உண்மையான காரணத்தையும் புது வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதையும் கண்டறிய முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அழுகை நோயின் அறிகுறிகள் வந்தவுடனேயே உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது என்பது மிக ஆபத்தான அறிகுறி என எச்சரித்துள்ளனர்.
அழுகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பது, சர்வதேச அளவில் கவலை பொது சுகாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.