தஞ்சை அருகே 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற பள்ளி மாணவர் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், வல்லம் பகுதியைச் சேர்ந்த தீரன் பெனெடிக்ட் என்பவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோது அற்புதாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த காளை முட்டியதில் படுகாயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு காளையை அடக்கினால் 200 ரூபாய் தருகிறேன் என்று உரிமையாளர் கூறியதாகவும், பணத்திற்கு ஆசைப்பட்டு காளையை அடக்கியபோது மாணவர் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாணவரின் உயிரிழப்புக்கு காரணமான காளையின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.