தென் மாவட்டங்களில் நிலவும் சட்டம் – ஒழுங்கு நடவடிக்கை குறித்து தமிழக டிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய டிஜிபி, பெண்கள் மீதான வன்கொடுமைகள், சைபர் கிரைம் குற்றங்கள், போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பது ஆகியவற்றில் காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் மற்றும் காவல்துறை நட்புறவை பேணிக்காக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். காவல்துறையினர் பணியின்போது மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்த டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.