64 கோடி ரூபாய் போஃபர்ஸ் ஊழல் வழக்கு குறித்த முக்கியமான விவரங்களை இந்திய நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்த, தனியார் புலனாய்வாளர் மைக்கேல் ஹெர்ஷ்மேனிடம் இருந்து தகவல்களை பெற, அமெரிக்க நீதித்துறைக்கு, மத்திய புலனாய்வுத் துறை சார்பில் லெட்டர் ரோகேட்டரி (LR) கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
சுதந்திர இந்திய அரசியல் மற்றும் ராணுவ வரலாற்றில் மிக முக்கியமான ஊழல் என்றால் அது போஃபர்ஸ் ஊழல் தான். இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த போஃபர்ஸ் பீரங்கிகளை இந்தியா வாங்க முடிவு செய்தது.
1986 ஆம் ஆண்டில், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில்,1,437 கோடி ரூபாய் மதிப்பிலான 410 போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்வீடன் வரலாற்றிலேயே, அந்த நாட்டுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய ராணுவ ஆயுத ஒப்பந்தம் இது தான்என்பது குறிப்பிடத் தக்கது.
1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி, இந்த போஃபர்ஸ் ஒப்பந்தத்தில், இந்தியாவின் உயர் அரசியல்வாதிகள் மற்றும் ராணுவத் துறை உயர் அதிகாரிகளுக்கு 64 கோடி ரூபாய்க்கு லஞ்சம் கொடுத்ததாக ஸ்வீடன் வானொலி தெரிவித்தது.
போஃபர்ஸ் விவகாரம் இந்திய அரசியலை மட்டுமின்றி, ஸ்வீடன் அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, இந்தியாவின் அப்போதைய ராணுவத் துறை அமைச்சர் வி.பி. சிங், பதவியை ராஜினாமா செய்தார். இதனால், ராஜீவ் காந்திக்கு எதிராக திரும்பினார் வி.பி. சிங்.
1989ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், போஃபர்ஸ் ஊழல் காரணமாகவே காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஜனதா தளம் கட்சி வெறும் 89 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற போதிலும் வி.பி.சிங் இந்தியாவின் ஏழாவது பிரதமரானார். வி.பி. சிங் அரசுக்கு பாரதிய ஜனதா கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன.
கடந்த 1990 ஆம் ஆண்டு போஃபர்ஸ் ஊழல் வழக்கை பதிவு செய்த சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. வாஜ்பாய் தலைமையிலான அரசு வந்தவுடன் தான், இந்த ஊழல் வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்றது.
கடந்த 1999 மற்றும் 2000 ஆம் ஆண்டில், போஃபர்ஸ் ஊழல் வழக்கில், டெல்லி கீழமை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த குற்றப் பத்திரிக்கைகளில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் ராணுவத் துறைச் செயலாளர் எஸ்.கே. பட்நாகர், இடைத் தரகர்களான ஒட்டரோயோ கொட்டரோச்சி, வின்சத்தா ஆகியோர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
டெல்லி கீழமை நீதிமன்றத்தில் போஃபர்ஸ் ஊழல் வழக்கு தள்ளுபடியானது. பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் சிபிஐ செய்த மேல் முறையீடு மனுவும் தள்ளுபடியானது.
2004 ஆம் ஆண்டு, இந்த இந்த ஊழலுக்கும் ராஜீவ் காந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பு வந்து, வழக்கில் இருந்து ராஜீவ் காந்தி விடுவிக்கப்பட்டார். இந்துஜா சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உட்பட மீதமுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குவாட்ரோச்சி மீதான வழக்கை வாபஸ் பெற சிபிஐயின் வேண்டுகோளை நீதிமன்றம் அனுமதித்த போது, அவரும் விடுவிக்கப்பட்டார். போஃபர்ஸ் ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இந்திய அரசியலையே புரட்டிப் போட்ட போஃபர்ஸ் வழக்கு, 2011 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
இந்நிலையில் தான், 2017 ஆம் ஆண்டு தனியார் துப்பறியும் நிபுணர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள (Firmfax) ஃபேர்ஃபாக்ஸ் குழுமத்தின் தலைவரான மைக்கேல் ஹெர்ஷ்மேன், இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில், போஃபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணையை காங்கிரஸ் அரசு முறையாக நடத்தவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
‘மான்ட் பிளாங்க்’ என்ற சுவிஸ் வங்கிக் கணக்கின் விவரங்களைக் கண்டபோது ராஜீவ் காந்தி கோபமடைந்ததாக மைக்கேல் ஹெர்ஷ்மேன் தெரிவித்திருந்தார். இந்த கணக்கில் தான், போஃபர்ஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய லஞ்சப் பணம் வைத்திருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் மத்திய புலானய்வு துறைக்கு போஃபர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், கடந்த ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து, இந்த வழக்கு தொடர்பான தகவல்களைப் பெற சிபிஐ கடிதங்கள் மற்றும் நினைவூட்டல்களை அனுப்பியிருந்தது. ஆனால், அமெரிக்காவிடமிருந்து எந்தத் தகவலும் பதிலும் கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில், அமெரிக்க நீதித்துறைக்கு சிபிஐ ஒரு லெட்டர் ரோகேட்டரி (LR) அனுப்பப் பட்டுள்ளது. லெட்டர் ரோகேட்டரி (LR) என்பது ஒரு நாட்டின் நீதிமன்றத்தால் மற்றொரு நாட்டின் நீதிமன்றத்துக்கு ஒரு குற்றவியல் விஷயத்தின் விசாரணைக்கு உதவும் தகவல்களைப் பெற அனுப்பப்படும் எழுத்துப்பூர்வ கோரிக்கையாகும்.
டெல்லி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அமெரிக்காவை தளமாகக் கொண்ட தனியார் புலனாய்வு நிறுவனமான (Firmfax) ஃபேர்ஃபாக்ஸின் தலைவர் மைக்கேல் ஹெர்ஷ்மேனிடம் இருந்து போஃபர்ஸ் வழக்கு தொடர்பாக வைத்திருக்கும் வழக்கு விவரங்களைப் பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சிபிஐயின் இந்த நடவடிக்கை மூலம், 38 ஆண்டுகளுக்கு முன் ராஜீவ் காந்தி ஆட்சியில் நடந்த போஃபர்ஸ் ஊழல் வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளது.
போஃபர்ஸ் ஊழல் வழக்கில், ராஜீவ் காந்தியின் தொடர்பு மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஊழல் முகம் விரைவில் வெளிச்சத்துக்கு வந்து விடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.