எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 1,500-க்கும் அதிகமான மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இவா்கள் கச்சத்தீவு-தலைமன்னாா் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகில் இருந்த 14 மீனவா்களைக் கைதுசெய்து, மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்றனா்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து மீனவ சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தற்போது பாம்பனை சேர்ந்த 14 மீனவா்கள் கைது செய்யப்பட்டிருப்பது ராமேஸ்வரம் பகுதி மீனவா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.