பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ராஜாதித்ய சோழன் அணிவகுப்பு மைதானத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது. இதனை திறந்த வெளி வாகனத்தில் பயணித்தபடி அமித்ஷா பார்வையிட்டார்.
இதையடுத்து “பாதுகாப்பான கடல்வளம், செழிப்பான இந்தியா” என்ற கருப்பொருளுடன் நடத்தப்பட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். நாட்டின் கடல் எல்லை பாதுகாப்பு, போதைப் பொருள் இல்லாத சமூகம், கடல் பாதுகாப்பில் மீனவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்தப் பேரணி வரும் 31-ம் தேதியன்று கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் நிறைவடைகிறது.
இந்நிலையில் பேரணியை தொடங்கி வைத்து உரையாற்றிய அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறினார். 2027-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒவ்வொரு வீரரும் தேசத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்து உள்ளனர் என்றும் கூறினார். ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது எனவும் மத்திய தொழில் பாதுகாப்பு படை தேர்வினை தமிழில் எழுத பிரதமர் மோடிதான் காரணம் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.