கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டிக்கு சொந்தமான கல் உடைக்கும் ஆலையில் 2016-ம் ஆண்டு நடந்த விபத்தில், பாலசுப்பிரமணியன் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.
ஆலையில் ஆய்வு செய்த திருச்சி தொழில் பாதுகாப்பு துறை துணை இயக்குனர், பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, பழனியாண்டிக்கு எதிராக கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் இருந்து பழனியாண்டியை விடுதலை செய்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கில் இருந்து பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்ததுடன், வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பளிக்கும்படி, கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.